விநாயகர் வழிபாடு - 2

Sunday, November 14, 2010
அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தங்கள்
நடராசர் :- படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிகளையும் செய்யும் கடவுள் அம்பலவாணர் திருவுருவம்.

உமாதேவி:- சிவபெருமானுடைய திருவருட்சக்தி. ஐந்தொழில்களுக்கும் துணையாகவுள்ள சிவசக்தி.உமாமகேசுவரராகிய சிவனே அம்மை வடிவங்களை வழிபடும் அன்பருக்கு அருள்பாலிப்பவர் என்பதை "உடையாள் நடுவுள் நீயிருத்தி" என்னும் திருவாசகம் மூலம் அறியலாம்.

சந்திரசேகரர்:- உமாதேவியை இடப்பாகத்தே கொண்ட போகவடிவம். சடையில் ஒற்றைப்பிறை விளங்கும்.

சோமஸ்கந்தர்:- சர்வலோகங்களையும் தேராய் அமைத்து ஆரோகணித்து முப்புரங்களையும் எரிக்கப்புறப்பட்ட கோலம்.

தட்சணாமூர்த்தி:- குரு வடிவம் கல்லால மரத்தின்கீழ் ஞானகுருவாக எழுந்தருளிய சிவபிரான் வடிவம்.

பிட்சாடனர்:- ஆன்மாக்கள் செய்யும் செப,தப அனுட்டானங்களை ஏற்கும் திருவடிவம்.

மேலும் திருக்கோயில்களில் விநாயகர்,பைரவர்,வீரபத்திரர்,முருகன் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் இருக்கும். சிவகுமாரர் நால்வரும் இறைவனின் சுத்த மாயா தத்துவத்திற்க் கொண்ட வடிவங்களாகும்.

விநாயகர்:- ஓங்காரத்தின்/பிரணவத்தின் உண்மைப்பொருளை அறிவிக்கும் சிவத்தின் வடிவம்.
பைரவர்:- சங்கர ருத்திரர் எனப்படுவர். சகல சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலம். சிவத்தினின்று தோன்றிய காரணத்தால் சிவகுமாரர் எனப்படுவர்.
இவரது வாகனம் வேதவடிவாகிய நாய் . இவரை வழிபடும்போது 'எங்களுடைய அகந்தையை நீக்கி காத்தருள வேண்டும்' என பிரார்த்தித்தல் வேண்டும்.
முருகன்:-இச்சா சக்தியாக வள்ளியம்மையையும் கிரியா சக்தியாக தெய்வானை அம்மையையும் உடையவர். மயிலாகிய வாகனம் ஆணவத்தையும் கொடியாகிய கோழி சிவ ஞானத்தையும் குறிக்கும்.
மேலும் ஆலயத்தில்;
பள்ளியறை:- காலையில் பள்ளியறைத் திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பனவாகும்.
கருவறை:- ஆலயத்தின் மையப்பகுதி. உடலில் இதயத்துள் இறைவன் இருப்பதற்குரிய அடையாளமாக விளங்குகிறது.
பலிபீடம்:- இது பாசத்தைக் குறிக்கிறது. இதை சிரி பலிநாதர் என்பர்.ஆலயத்துள் எட்டுத் திக்குகளில் எட்டுப் பலிபீடங்கள் இருக்கும். இவை எட்டுத்திக்குப் பாலர்களை உணர்த்தும். இவைகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாக உள்ளது நந்தியெம்பெருமானின் பின்பு உள்ள பலிபீடமாகும்.
நாம் வெளி எண்ணங்களை எல்லாம் பலியிட்டுவிட்டு இறைவனை வழிபட செல்லவே பலிபீடம் அமைந்துள்ளது.
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் பாதுகாக்கவும் கொடிமரம் அமைந்துள்ளது.
நந்தியெம்பெருமான்:- சிவபெருமானை எந்நேரமும் வணங்கி பார்த்தபடி இருக்கும் நந்தியெம்பெருமான் "நான் மறந்தாலும் என் நா மறவாது ஓது நாமம் நமசிவாயவே" என்பதுபோல் கண்காள் காண்மிங்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை" என்று அப்பர் பெருமான் ஏங்கியதுபோல் இடைவிடாது இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும்.

மண்டபங்களின் தத்துவம்
திருமூலட்டானம்:- மூலாதாரம்
அர்த்தமண்டபம்:-சுவாதிட்டானம்
மகாமண்டபம்:-மணிபூரகம்
ஸ்நான மண்டபம்:- அநாகதம்
அலங்கார மண்டபம்:-விசுத்தி
சபாமண்டபம்:-ஆக்ஞை

பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணக்க வேண்டும். கோயிலில் வேறு எங்கும் எச்சந்நிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது.
சமய சின்னங்கள் இன்றி ஆலயம் செல்லல் ஆகாது.
இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு,வில்வம்,மலர் போன்றவற்றை மிதித்தல் ஆகாது.
ஒரே ஒருமுறை பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
தனித்தனியாக ஒவ்வொரு பிரகாரத்தையும் வலம் வருதல் கூடாது.
கோயிலில் படுத்து உறங்குதல் கூடாது.
சந்தியா வேளையில் உணவோ வேறு தின்பண்டமோ உண்ணல் ஆகாது.(சந்தியா வேளை மாலை 5.31 முதல் 7.30 மணிவரை.)
இரைந்துசிரித்தல் ஆகாது.
ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணுதல் கூடாது.
தலைமுடி ஆற்றுதல் கூடாது.
ஆராதனைக்குரிய பொருள் இன்றி ஆலயம் செல்லல் தவறு.
கோயிலில் வேகமாக வலம் வருதல் கூடாது. கர்ப்பிணிப் பெண் மெதுவாக நடப்பதுபோல் வலம்வருதல் வேண்டும்.
ஆண்கள் சட்டையணிந்து கொண்டோ போர்த்துக் கொண்டோ ஆலயம் செல்லல் தவறு. மேல் வேட்டியை(சால்வையை) இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லல் வேண்டும்.தலைப் பாகை அணிந்திருத்தல் கூடாது.
மூர்த்திகளை தீண்டுதல்,மூர்த்திகளின் கீழ் கற்பூரம் ஏற்றல் கூடாது.
சுவாமிக்கு நிவேதனமாகும்போது பார்த்தல் கூடாது.
சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
நந்திக்கும் சுவாமிக்கும் குறுக்கே போதல் கூடாது. நந்தியெம்பெருமான் இமைக்காது சிவபிரானை பார்த்து தொழுதவண்ணம் இருப்பதால் குறுக்கேபோவது பாவத்தை ஏற்படுத்தும். தூபி,பலிபீடம்,கொடிமரம்,விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூறினுள்ளே செல்லல் பாவம் இல்லை என்பர். திருவிளக்குகளை கையால் தூண்டவோ,தூண்டிய கைகளில் உள்ள எண்ணெய்யை தலையில் தடவுதலோ அன்றி கோயிற் தூணில் துடைத்தலோ கூடாது.
அபிடேக காலத்தில் உட்பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணக்கூடாது.
தீட்டுடன் செல்லல் கூடாது ஒருவரை ஒருவர் நிந்தித்தல் கூடாது

பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?

மாதொருபாகனாகிய சிவனாரின் வலப்பக்கம் சிவனாகிய ஆணும் இடப்பக்கம் பெண்ணாகிய உமையும் இருப்பதைக் கொண்டு எழுந்ததாக இருக்க வேண்டும்.தோடுடைய செவியன் என்று ஞான சம்பந்தர் பாடுகிறார். தோடு என்பது பெண்கள் அணிவது. ஆண்கள் காதில் அணிவதற்கு குழை என்று பெயர். எனவே இறைவனின் இடப்பாகம் பெண்ணுக்குரியது என்பதை திருஞானசம்பந்தர் விளக்கியுள்ளார். காலனை சிவபிரான் இடப்பக்க காலால்தான் உதைக்கிறார். அதனாலேயே காலன் பிழைத்தான் என்பர் ஆன்றோர். காரணம் சிவனின் இடப்பக்கம் பெண்ணாகிய உமையம்மையாதலால் பெண்மை குணமாகிய இரக்கத்தின் விளைவால் இடக்கால் காலன்மேல் இரக்கம் கொண்டு காலனின் உயிர்பறிக்காது தண்டித்தது என்பர்.எனவே வலம்-ஆண் என்றும் இடம்-பெண் என்பதும் மரபாயிற்று.பேருந்தில் கூட வலப்புறம் ஆண்களும் இடப்புறம் பெண்களும் அமர்வது தமிழகத்தில் விதியாக்கப் பட்டுள்ளதை கண்டிருப்பீர்கள். இந்த "இடம்" பெண்களுக்கு என்பது காலம் காலமாக திருமணத்தில் தாலி ஏறியது தொட்டு குடும்ப நல்லதுகள்வரை பெண்களுக்கு "இடம்" என்ற பண்பாடு இருந்தமையால் ஏற்பட்டதே!எனவே இடப்புறமாக பெண்கள் நின்றும் வலப்புறமாக ஆண்கள் நின்றும் வழிபடல் வேண்டும் என வந்துள்ளது.ஆனால் இதை ஆலய வழிபாட்டு விதியாகக் கருதமுடியாது. இறைவன் தில்லையில் கூத்தாடும்போது வலப்புறமும் இடப்புறமும் வியாக்கிரதபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுகின்றனர். எனவே இறைவனை இடப்பக்கமாக பெண்களும் வலப்பக்கமாக ஆண்களும் நின்று வழிபடல் வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. ஆனால் ஆலயத்தில் துஷ்டர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க இம்முறையை சில ஆலயங்களில் கட்டாயவிதியாக கடைப்பிடிப்பர். அப்படி கடைப்பிடிப்பது நன்மையே என்பதால் "அவ் விதியை" ஒழுகுவதே உத்தமம்.

விநாயகர் வழிபாடு நந்தியெம்பெருமானை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டபின்னர் மேற்கொள்வதா அன்றி அதற்கு முதலிலேயே வழிபடல் வேண்டுமா?

பெரிய சிவாலயங்களில் (ஆகமவிதிப்படி முறையாக அமைந்த ஆலயங்கள்) கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள விநாயகரை வழிபட்டு, பின் கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபட்டு பின்னர் துவாரபாலகர்களை வழிபட்டு தொடர்ந்து விநாயகர் சந்நிதியில் வழிபட்ட பின்னர் சிவபெருமானை வழிபடல் வேண்டும்.திருக்கைலாயத்திலும் நந்தியின் அனுமதியுடனேயே திருக்கைலாயம் நுழைய முடியும். பின்னர் துவார பாலகர்களின் அனுமதி பெற்று உட்செல்லும் போது சிவகுடும்பத்தை வணங்க முடியும். சிவ குடும்ப வணக்கத்தில் விநாயகர் வணக்கம் முதன்மை பெறுகிறது. எனவே துவார பாலகர்களுக்கு அடுத்ததாக விநாயகர் வழிபாடும் அதனைத் தொடர்ந்து மூலமூர்த்தி வழிபாடும் விதியாகிறது.

சேரமான் பெருமானுக்கு முன்னமே ஔவையாரை துதிக்கையால் திருக்கைலாயம் கொண்டு சென்றவர் விநாயகர் என்ற தத்துவத்தை கருத்தில் நிறுத்தின் விநாயகர் வழிபாடு திருக்கைலாயம் செல்லும்போது ஏற்படும் இடர்களை நீக்கவல்லது.அதுபோல் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய இடர்களை விநாயகர் வழிபாடு நீக்க வேண்டியே பெரிய சிவாலயங்களில் கோபுரவாசலின் வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது மரபு என உணரலாம்.

எனவே கோபுர வாசலில் வெளியே வலப்புறமாகவுள்ள விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் நந்தியை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டு அதன்பின்னர் விநாயர் சந்நிதி இருக்குமானால் அவ்விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் மூலமூர்த்தியை வழிபடல் வேண்டும் என்பது புலனாகிறது.




சுருங்கக் கூறின்

* நித்திய கருமங்களை முடித்து நீராடி தூய ஆடையணிந்து சிவசின்னங்களாகிய திருநீறு,உருத்திராக்கம் அணிந்து ஆலயம் செல்லல் வேண்டும்.

* கோபுரத்தை கண்டமாத்திரம் கைகூப்பி தொழவேண்டும்.

* மலர்கள்,பாக்கு,மாலை,கற்பூரம்,பழம் என்பவற்றை கொண்டுசெல்லல் வேண்டும்.

* தல விநாயகரை(கோபுரத்துக்கு வெளியே வலப்புறமாக இருப்பார்.) தரிசித்து குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டு வழிபட்டு உட்செல்ல வேண்டும்.

* கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபடல் வேண்டும்.

* துவார பாலகர்களை வணங்கியபின்னர் ஆலய திருமூலட்டானத்தின் வலப்புறமாக விநாயகர் சந்நிதியில் வழிபடல் வேண்டும்.

* மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள ஏனைய மூர்த்திகளை வழிபடல் வேண்டும்.

* சண்டேசுவரரை மெதுவாக மும்முறை கைகளைத் தட்டி பின் வணங்குதல் வேண்டும். திருநீற்றை இருகைகளாலும் பணிவுடன் பெற்று சிவசிவ என உச்சரித்த வண்ணம்

* மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும்.கிழே சிந்துதல் கூடாது.

* ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும்.

* கொடிமரத்தின் கீழ்(பலிபீடத்திற்கு அப்பால்) விழுந்து வணங்க வேண்டும்.

* வடக்கு முகமாக சற்று அமர்ந்து திருமுறை, திருவைந்தெழுத்தை ஓதி ஆலய வழிபாட்டை பூரணப்படுத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment