அப்பர்

Sunday, November 21, 2010
`இளமைக் காலத்தில் சிவபெருமானை வணங்காமல் வாழ்நாளை வீணாக்கிவிட்டேன்' எனத் தெளிவாகவே சொல்கிறார் அப்பர். `முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை' என்பது பெருமானாரின் வரலாற்றுக் குறிப்பு.

முன்ன மேநினை யாதொழிந் தேனுனை
இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்ன னேஅடி யேனை மறவலே. (5.57.1)

முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ்திருக் கோளிலி
மன்னனே அடியேனை மறவலே.

`முன்னரே உன்னை நினையாது ஒழிந்தேன்; இன்னமும் உன் திருவடிகளை நான் நன்கு ஏத்தவில்லை. செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே! அடியேனை மறவாதே.'

உன - உன்னுடைய
சேவடி - செம்மையான திருவடி
ஏத்திலேன் - ஏத்தவில்லை; போற்றவில்லை
திருக்கோளிலி - ஊரின் பெயர்: திருக்குவளை என வழங்கப்பெறும்
மறவலே - மறவாதே

இறைவர் திருவடிகளைப் போற்றிப் பல்லாயிரம் பாடல்கள் பாடிச் செந்தமிழால் வணங்குகிறார் அப்பர்; ஆயினும் தம் திருத்தொண்டில் பெருமானாரின் உள்ளம் நிறைவு கொள்ளவில்லை.

`இமைப்பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்காச் சேவடிகளை வணங்கியது போதாது; இன்னும் இன்னும் இன்னும் வணங்கவேண்டும்' என்கிறார்.

மெய்யடியார்களின் அன்பின் திறம் இது. `தேனாய் இனிய அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமானை வணங்குவதற்கு அளவில்லை' என்கிறார் அப்பர்.

பேரன்பும் பேரருளும் வாய்ந்த மெய்யடியாராக விளங்கினாலும் தம்மை மிகவும் எளியவராகவே கருதுவார் அப்பர்.

`சிவபெருமானே, உன்னை வணங்கும் மெய்யடியார்கள் பலர். யானோ மிகவும் எளியவன்; உன்னை முன்பு வணங்காது இருந்தவன்; இன்னும் செம்மையாக வணங்காதவன்; ஆயினும் அடியேனை மறந்துவிடாதே! என்னையும் நினைந்து அருள்செய்வாயாக!' எனப் பணிந்து வேண்டுகிறார்.

இறைவரை வணங்காது இருந்து, இறையருளால் உண்மை உணர்ந்து, இறைவரை வணங்கத் தொடங்கியவர்கள் இத்திருப்பாடலை நாள்தோறும் உள்ளம் உருக ஓதி வழிபடுதல் நன்று.

No comments:

Post a Comment