தமிழ் எண் - 1

Sunday, November 14, 2010
தமிழ் எண் கணக்குகள்
"கரு", " கயரு", " களஉயரு " அப்டீன்னா என்ன? "கரு"ன்னா தெரியும். "கயரு" ன்னா தெரியும். அது என்ன "கள உயரு" இப்படி எல்லாம் சொல்லி எங்கள சோதிக்காதீங்க?! அப்டீங்கிறீங்களா? நீங்க நெனைக்கிற கரு, கயரு இது கிடையாது. இதெல்லாம் தமிழ் எழுத்துக்களில் வரும் தமிழ் எண்கள். காதுல பூ வைக்கிற சமாச்சாரமெல்லாம் இல்லை. ஒரு "கரு" கைமாத்தா கொடேன், என்றால் 12 ரூபா கைமாத்தா கொடேன் என்றுதான் பொருள். அந்தக் காலத் தமிழ்! அதுக்குன்னு இந்தக் காலத்துல, ஒரு "கரு" கைமாத்தா கொடுன்னு கேக்கக்கூடாதவங்ககிட்ட கேட்டால், நல்லா மாத்துதான் கிடைக்கும் இல்லீங்களா? க=1,உ=2,ரு=5,ய=10,ள=100. 15 என்பதை கயரு என்றும் 125 என்பதை களஉயரு என்றே எழுதுவார்கள். தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி (கம்ப்யூட்டர்)போல. உள்ளிட்டது (இன்புட்) தான் அப்படியே வரும். நமக்கு இந்தத் தமிழ் வேண்டாம்கிறீங்களா? நடைமுறையிலிருக்கிறதே நல்ல தமிழ்தான் என்ற முடிவுக்குச் சட்டென்று வந்துவிடுவோம். சரி... தமிழ் ஆராய்ச்சிய அப்பறமா வச்சுக்குவோம்.
"பார்த்திப" என்ற கடந்தவாண்டு முடிவடைந்து "விய" ஆண்டு புலருகிறது. பஞ்சாங்க கணிப்புகளின்படி இவ்வாண்டு பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆகவே நல்ல ஆண்டாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறதாம். தம்ழிஆண்டுச் சுழற்சியில் இருபதாம் ஆண்டு இவ்வாண்டு!
அக்காலத்தில் சூரியனே பூமியை அல்லது மேருவைச் சுற்றிவருவதாக நம்பினார்கள். ஆகவே சூரியன் ஒருமுறை சுற்றிவரும் கால அளவு என்றே கருதினார்கள். இதனை சூரியனின் பெயரால் சௌரமான ஆண்டுக்கணிப்பு என்று அழைத்தார்கள். இது 365.25+++ நாள்கால அளவு கொண்டது. சௌரமான மாதங்கள் சாந்திரமான மாதப்பெயர்களையும் முக்கிய திதிகளையும் பெற்றுக்கொண்டன. செளரமான மாதங்கள் வானத்துவிண்மீன்களின் அதாவது நட்சத்திரங்களின் பெயர்கள் கொண்டே நிர்ணயித்தனர். தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேஷராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.
இன்னொன்றில் சந்திரன் பூமியைச்சுற்றும் காலத்தை அடிப்படையாகக்கொண்டது. ஒரு அமாவாசையிருந்து மறு அமாவாசை வரைக்கும் கொண்ட கால அளவு. இது 29.5 நாள்களைக் கொண்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன் சந்திரன் கூடியிருக்கும்போதே முழுநிலவு ஏற்படும்.
ஆகவே ஒவ்வொரு சாந்திரமான மாதமும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயரேலேயே அழைக்கப்படலாயிற்று. சித்திரை, வைகாசி என்றெல்லாம் அப்படித்தான் ஏற்பட்டன. பழங்காலத்திலேயே சௌரமானத்தையும் சாந்திரமானத்தையும் இணத்துவிட்டார்கள். இதன்படி தமிழ் மாதங்களை சித்திரை - மேட ஞாயிறு, வைகாசி - இடப ஞாயிறு, ஆனி - மிதுன ஞாயிறு, ஆடி - கடக ஞாயிறு ,ஆவணி - சிங்க ஞாயிறு, புரட்டசி - கன்னி ஞாயிறு, ஐப்பசி - துலா ஞாயிறு கார்த்திகை - விருச்சிக ஞாயிறு, மார்கழி - தனு ஞாயிறு, தை - மகர ஞாயிறு, மாசி - கும்ப ஞாயிறு பங்குனி - மீன ஞாயிறு, என்றும் வழக்கத்தில் கொண்டிருந்திருக்கின்றனர்.
அடுத்து ஆண்டு கணக்கிடும் முறையில், அறுபது ஆண்டுகளுக்கு பெயர் சூட்டி, 60 ஆண்டுகள் ஆனதும் அந்தப் பெயர்களையே திரும்பவும் பயன்படுத்தும் சுழற்சி முறை இடைக்காலத்தில் புகுந்த வைதீக வழிபாட்டு முறையாகும். இந்தப் பற்சக்கர முறையில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு வழங்கிய கணக்கு ஆபாசக் கணக்கு! அதற்கு முன் விக்கிரமன் சகாப்தம், சாலிவாகன சகாப்தம், போன்று ஆண்டுகளைத் தொடர்ச்சியாக எண்ணிக்குறிக்கும் முறையே இருந்திருக்கிறது. வைதிக முறையில் அமையும் பிரபவ, விபவ முதலான ஆண்டுப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களும் அல்ல; வரலாற்று அறிவு பெறவும், காலம் கணக்கிடவும் ஏற்றதுமல்ல; இருந்தபோதும் வடமொழியை வாயிலாக வைத்து பிரசவித்த வருடங்களைத்தான் தமிழ் வருடங்களாகப் பாவித்து வருகிறோம் என்பது மிகக் கசக்கும் உண்மை. தமிழாண்டுப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம். தற்போது நடைமுறையில் உள்ள தமிழாண்டு 21 வது ஆண்டாகும்.
திருவள்ளுவராண்டு.....! திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாட்டரசு சொன்னாலும் அது இன்னும் மக்களிடம் நடைமுறையில் இல்லை. யாரும் நான் திருவள்ளுவர் ஆண்டு 1900ல் பிறந்தேன் என்று சொல்லிக்கொள்வதில்லை. கல்யாணப்பத்திரிகைகளில் கூட திருவள்ளுவர் ஆண்டு வரிசையைப் பயன்படுத்துவதில்லை. நம்மிடமும் பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட வட்டமொன்று இருக்கிறது. இப்போது அது வழக்கில் இல்லை. அதனை இப்போது மாமாங்கம் என்றுகுறிப்பிடுகிறோம்.
தூரகிழக்கு தென்கிழக்காசிய நாடுகள் அனைத்துக்குமே சொந்த காலந்தேர்கள் (காலண்டர்கள்) இருக்கின்றன.
ஜாவாவில் சக ஆண்டு.
ஜப்பானில் சக்கரவர்த்திவம்சத்தின் தொடக்கம்.
தாய்லந்தில் பௌத்த ஆண்டு.
சீனாவுக்கு கான்·பூஷியஸ் ஆண்டு, தாஓ ஆண்டு முதலியவை.
இருப்பினும் சீனாவில் அதிகம் பயில்வது கிரெகோரியன் காலண்டர்தான்.
வியாழன்/குரு பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரித்து மீண்டும் ஆரம்பித்தஇடத்துக்கே வரும் கால அளவு ஒரு மாமாங்கம்.
மனித வாழ்க்கையில் ஒரு மாமாங்கம் என்பது முக்கியமான அளவுகோல்.பன்னிரண்டு வயதில் திருமணம் செய்வார்கள்.
தமிழருக்கு தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்கும் முறை இல்லா நிலை நீக்க தமிழறிஞர்கள், சான்றோர் புலவர் பெருமக்கள் 1921ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தமிழ்தென்றல் திருவிக., தமிழ்க்காவலர் சுப்பிரமணியபிள்ளை, சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர்.ந.மு.வேங்கடசாமிநாட்டார், நாவலர் சோமசுந்தரபாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பொ.விசுவநாதம் ஆகியோர் உட்பட்ட தமிழ்ப்பேராளர்கள் இதில் கலந்துகொண்டு தொடர்ச்சியாக ஆண்டுக் கணக்கு மேற்கொள்ளத் தமிழர்கள் குறிக்கும்வகையில் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தீர்மானித்தது. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். வள்ளுவராண்டு என்று அவர்கள் கணித்திருப்பதுகூட தவறான கணிப்புத்தான், என்று சொல்லுவாரும் உண்டு.
1971ல் தமிழக அரசு நாட்குறிப்புகளில் திருவள்ளுவராண்டு இடம்பெறத்துவங்கியது; 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981லிருந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலிலும் திருவள்ளுவராண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்துமாறு அரசால் அறிவுறுத்தப்படவில்லை.
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் 50ஆண்டுகள் அயராது ஆராய்ச்சி செய்து சித்திரை முதல் பங்குனிவரை உள்ள 12 மாதங்கள் பெயர்கள் தமிழோடு தொடர்புடையது அல்லஅல்ல என்று அடித்துக்கூறி,"சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, தலை, துளி, சிலை ஆகிய 12 மாதப் பெயர்களையும் ஙாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்று ஏழுகிழமைகளுக்கான தமிழ்ப் பெயர்களையும் தமிழர்கள் பின்பற்றவேண்டும் என்று கூறினார்.
செய்யத்தகக்வை என்று சான்றோர் பெருமக்கள் புகழ்ந்து கூறியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தோருக்கு எப்போதும் நன்மை இல்லை என்பது அய்யன் வள்ளுவனின் வேதவாக்கு. "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - 538 எனவே தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனும் வளனும் நாடுவோர் திருவள்ளுவராண்டை உபயோகிப்பர்.

No comments:

Post a Comment