தமிழில் காப்பியங்கள்

Wednesday, November 3, 2010
தமிழில் காப்பியங்கள்

தமிழில் காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல் எனத் தமிழறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார் வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும் காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இதிகாசம்

கடவுளரும் கடவுளின் அம்சம் ஆனவர்களும்,மானிடராகப் பிறந்து, பல தெய்வீகச் செயல்களை ஆற்றி, இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும். (இதிகாசம் என்னும் சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாம்.)

புராணம்

கடவுளர் பற்றிய புராணங்களில் தெய்வங்கள், தெய்வீக நிலையில் நின்று செயல்படுகின்றன. இத்தெய்வங்களின் அற்புதச் செயல்கள் ஒரு தலத்தைச் (இடம்) சார்ந்து அமைகின்ற போது அதைப் பற்றிக் கூறும் கதைப் பாடல்கள் தல புராணங்கள் என்று பெயர் பெறுகின்றன.

காப்பியம்

சிறப்பு மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை ஆற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள் எனப்படுகின்றன.

தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றது.

No comments:

Post a Comment