சோமவார விரதம்

Monday, November 22, 2010
சோமவார விரதம் தோன்றிய வரலாறு:


சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகžருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.



சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த வருடம் ஐந்து சோமவாரங்கள் வருகின்றன. ஐந்து வாரங்களிலும் இவ்விரதம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆண்டவன் உத்தரவு.

முதல் வாரமான இவ்வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்பு மற்றும் கார்த்திகை சோமவார விரதம் தோன்றிய வரலற்றைக் காணலாம்.

இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி காணலாம்.

மூன்றாம் வாரம் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பற்றி காணலாம் .

நான்காம் வாரம் பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதை காணலாம்.

நிறை வாரம் 1008 சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருக்கடையூர் தலவரலாறும் சங்காபிஷேக உற்சவம் பற்றியும் காணலாம்.

No comments:

Post a Comment