விநாயகர் வழிபாடு

Sunday, November 14, 2010
ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார். புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார். இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.
அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார். மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார்.
வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது. அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.

No comments:

Post a Comment